ஐதராபாத் நிஜாம் பணம் இந்தியாவிற்கா? பாகிஸ்தானுக்கா? : கடும் மோதலுக்கான தீர்ப்பு விரைவில்

புதன், 26 ஜூன் 2019 (11:19 IST)
லண்டன் வங்கியில் உள்ள ஐதராபாத் நிஜாமின் பணம், இந்தியாவிற்கா? பாகிஸ்தானுக்கா? என்பது தொடர்பாக, லண்டன் கோர்ட்டில்  இந்தியாவிற்கும் பாகிஸ்தனுக்கும், இடையே பல ஆண்டுகளாக வழக்கு நடந்து வரும் நிலையில், இன்னும் 6 வாரங்களில் தீர்பு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

1940-களில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது, தனி சமஸ்தானமாக இருந்த ஐதராபாத்தை இந்தியாவுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டது.

அப்போது அதை எதிர்த்த ஐதராபாத் நிஜாமுக்கு, பாகிஸ்தான் உதவும் வகையில் நிஜாமுக்கு பல ஆயுதங்கள் வழங்கப்பட்டது.

அதற்கு பிரதி உபகாரமாக ஐதராபாத் நிஜாம், 10 லட்சத்து 800 பவுண்டு பணம், அப்போதைய பாகிஸ்தான் தூதர் ஹபிப் உப்ராஹிம் ரஹிதுல்லாவுக்கு அனுப்பினார்.

அப்பணம் பாகிஸ்தான் தூதரின் பெயரில் லண்டனில் உள்ள நேட்வெஸ்ட் வங்கி கணக்கில் போடப்பட்டது. பின்னாளில் இந்தியாவுடன் ஐதராபாத் சேர்க்கப்பட்ட போது அப்பணத்தை நிஜாம் திரும்ப கோரினார்.

அதற்கு பாகிஸ்தான் மறுக்கவே, யார் உரிமையாளர்? என்று தெளிவான பிறகு வங்கி அந்த பணத்தை திரும்ப தருவதாக கூறியது.

இது தொடர்பாக லண்டன் கோர்ட்டில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல ஆண்டுகளாக வழக்கு நடந்து வருகிறது.

நிஜாம் வாரிசுகள், இந்திய அரசுடன் கைகோர்த்து இந்த வழக்கை நடத்திவருகிறார்கள். இந்நிலையில் கடந்த இரண்டு வாரமாக இறுதிகட்ட விசாரணை நடந்தது.

இதனை தொடர்ந்து அடுத்த 6 வாரங்களில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் லண்டன் வங்கியிலுள்ள ஐதராபாத் நிஜாம் பணம் தற்போது ரூ.315 கோடி ரூபாயாக பெருகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்