திருமணம் செய்தால் கடன், குழந்தை பெற்றால் கடன் ரத்து: வித்தியாசமான அறிவிப்பு
வியாழன், 14 பிப்ரவரி 2019 (19:29 IST)
இந்தியா, சீனா போன்ற நாடுகளில் மக்கள் தொகையை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் ஹங்கேரி நாட்டில் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருவதால் மக்கள் தொகையை அதிகரிக்க அந்நாட்டு அரசு புதிய சலுகையை அறிவித்துள்ளது.
இதன்படி திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு ரூ.25 லட்சம் அரசு கடன் வழங்கப்படும் என்றும் அந்த தம்பதிகள் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொண்டால் அந்த கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என்றும் ஹங்கேரி நாட்டின் பிரதமர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் திருமணம் செய்து 4 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹங்கேரி பிரதமரின் இந்த அறிவிப்பால் வரும் ஆண்டுகளில் அந்நாட்டின் மக்கள் தொகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 1980ஆம் ஆண்டில் இருந்து அந்நாட்டின் மக்கள் தொகை ஆண்டு ஒன்றுக்கு 28 ஆயிரம் குறைந்து வருவதாகவும், இதனை தடுக்கவே இந்த அதிரடி அறிவிப்பு என்றும் ஹங்கேரி அரசு தெரிவித்துள்ளது.