கோல்டன் டோம் தேவையில்லை.. அமெரிக்காவுடன் இணைய முடியாது: கனடா பதிலடி..!

Mahendran

புதன், 28 மே 2025 (15:34 IST)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்த புதிய பாதுகாப்பு முன்மொழிவை கனடா மறுத்துள்ளது. ‘கோல்டன் டோம்’ என அழைக்கப்படும் வான் பாதுகாப்பு திட்டத்தை இலவசமாக வழங்கப்படும் என்ற சலுகையுடன், கனடா அமெரிக்காவின் 51வது மாகாணமாக இணைவதை டிரம்ப் பரிந்துரைத்திருந்தார். ஆனால், இந்த பரிந்துரையை கனடா அரசு தெளிவாக மறுத்துள்ளது. 
 
“கனடா என்பது தனது சுயாதீனத்தையும், தேசிய உரிமைகளையும் பெருமையாக காக்கும் நாடாகும். வேறு எந்த நாட்டின் கட்டுப்பாட்டிற்கும் அமைய முடியாது,” என பிரதமர்   அலுவலகம் தெரிவித்துள்ளது.
 
‘கோல்டன் டோம்’ திட்டம், விண்வெளியில் இருந்து வரும் தாக்குதல்களையும் தடுக்கக்கூடிய வகையில் ஒரு அதிநவீன பாதுகாப்பு வசதி. இதற்கான மதிப்பு 175 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என கூறப்படுகிறது. தனிநாடாக கனடா இந்த பாதுகாப்பை பெற விரும்பினால், 61 பில்லியன் டாலர்கள் செலவாகும். ஆனால் அமெரிக்காவின் ஒரு பகுதியாக இணைந்தால், அது இலவசமாகக் கிடைக்கும் என டிரம்ப் கூறியிருந்தார்.
 
இந்நிலையில், இந்த திட்டம் அமெரிக்காவின் ஒரு வகை வணிக மற்றும் அரசியல் உத்தியாகவே பார்க்கப்படுகிறது. அதன் கீழ், தனது பாதுகாப்பு வலுவை உறுதிப்படுத்திக் கொள்ள அமெரிக்காவுடன் இணைதல் அவசியம் எனவும் டிரம்ப் கருத்து தெரிவித்திருந்தார். ஆனால், கனடா தன்னாட்சிக்கே முதன்மை அளித்து அந்த அழைப்பைத் தள்ளுபடி செய்துள்ளது.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்