சமூக ஊடகத் தடையால் வெடித்த போராட்டம்.. நேபாளத்தில் 16 பேர் பலி..!

Mahendran

திங்கள், 8 செப்டம்பர் 2025 (17:20 IST)
நேபாளத்தில், சமூக ஊடகங்களுக்கு அந்நாட்டு அரசு விதித்த தடையை எதிர்த்து, ‘ஜென் Z’ தலைமுறையினர் மிகப் பெரிய போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இணையத்தில் தொடங்கிய இந்த போராட்டம், இன்று வீதிக்கு வந்து வன்முறையாக மாறியது. தலைநகர் காத்மாண்டுவில் உள்ள நாடாளுமன்றம் அருகே காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில், குறைந்தது 16 போராட்டக்காரர்கள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
 
நாடாளுமன்றம் நோக்கி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பேரணியாக சென்றபோது, நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால், காத்மாண்டுவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அமைதியை நிலைநாட்ட நேபாள ராணுவமும் களமிறக்கப்பட்டுள்ளது.
 
நேபாள அரசு, செப்டம்பர் 4-ஆம் தேதி 26 சமூக ஊடக தளங்களுக்குத் தடை விதித்தது. தகவல் தொடர்பு அமைச்சகத்தில் பதிவு செய்ய தவறியதே இதற்கு முக்கிய காரணம் என அரசு கூறியது. ஆனால், இது கருத்து சுதந்திரத்தை நசுக்கும் முயற்சி என போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
 
இந்தத் திடீர் சமூக ஊடகத் தடை, ஏற்கெனவே ஊழல் மற்றும் பொருளாதார பிரச்சனைகளால் கோபத்தில் இருந்த நேபாள இளைஞர்களை, வீதியில் இறங்கி போராட தூண்டிய ஒரு முக்கியமான காரணமாக கருதப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்