ராஜகுடும்பத்தை துரத்தும் கொரோனா; சிக்கலில் இங்கிலாந்து!

வியாழன், 2 ஏப்ரல் 2020 (08:37 IST)
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸால் முதன்முறையாக இங்கிலாந்தில் அதிகளவிலான நபர்கள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்த ஆசிய நாடுகளில் அதன் தாக்கம் குறைந்திருந்தாலும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பெரும் உயிர்பலியை ஏற்படுத்தி வருகிறது. இத்தாலி, ஸ்பெயினை தொடர்ந்து இங்கிலாந்தும் ஏராளமான உயிர்பலியை சந்தித்து வருகிறது.

இதனால் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபத் பக்கிங்ஹாம் மாளிகையில் இருந்து வெளியேறி வின்ஸ்டர் கோட்டையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளார். அவரது மகன் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா இருப்பது உறுதியான நிலையில் அவரும், அவரது மனைவியும் பால்மோரல் மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அரச வம்சத்தினரே கொரோனாவை கண்டு அஞ்சும் நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. இப்படியாக முக்கிய தலைவர்களை தாக்கிய கொரோனா மக்களையும் வேகமாக பாதித்து வருகிறது.

இதுவரை இங்கிலாந்தில் 29,864 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. 2,352 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒருநாளில் மட்டும் 563 பேர் பலியாகி உள்ளனர். இங்கிலாந்தில் ஒரே நாளில் 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் இறந்திருப்பது இதுவே முதல்முறை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்