விலங்குகள் தற்செயலாக இசைக்கருவிகளை மீட்டும் வீடியோக்கள் சிலவற்றை பார்த்திருப்போம். ஆனால் அமெரிக்காவை சேர்ந்த நாய் ஒன்று பிரபல இசை வகைகளை வாசிப்பதும், வாயால் ஓலமிட்டு பாடுவதும் உலக அளவில் வைரலாகியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்தவர்கள் க்ளென் மற்றும் லௌரி தம்பதியினர். இவர்கள் ஒரு நாய்க்குட்டியை வளர்த்து வந்திருக்கிறார்கள். இசையில் ஆர்வமுள்ள அந்த தம்பதியினர் அடிக்கடி குயின் பேண்ட் பாடகரான ஃப்ரெடி மெர்குரியின் பாடல்களை கேட்பார்கள். ஒருநாள் அந்த நாய்க்குட்டி பியானோவை வாசித்து கொண்டு, வாயால் ஓலமிட்டு பாடுவதை பார்த்த அவர்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர். அதனால் அதற்கு ஃப்ரெடி மெர்குரியை நினைவுப்படுத்தும் விதமாக “படி மெர்குரி” என்று பெயரிட்டனர். படி பாடுவதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர அது உலகமெங்கும் ட்ரெண்டானது.
நியூயார்க்கில் மக்கள் பலர் பிஸ்கெட்டுகளை வாங்கி கொண்டு படியை பார்க்க குவிந்தார்கள்.
க்ளென் தம்பதியினருக்கு சில வருடங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. சமீபத்தில் படி பாடியபடியே, பியானோ வாசிக்க அதற்கு அந்த குழந்தை நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
படி மெர்குரி குறித்த செய்திகள் உள்ளூர் நாளிதழ்களில் பிரபலமானதுடன் டீசர்ட், காபி கப் போன்றவற்றிலும் படியின் போட்டோ பொறித்து விற்பனை செய்து வருகின்றன. அதுமட்டுமல்லாமல் படி இப்போது ஒரு பிஸியான ஆள். படியை சந்திக்கவும், அதன் இசையை கேட்கவும் முன்னரே பதிவு செய்து வைத்து கொள்ள வேண்டுமாம்!