அமெரிக்காவுக்கு செல்ல விரும்பும் வெளிநாட்டினர், விசா விண்ணப்பிக்கும்போதே ரூ.13 லட்சம் டெபாசிட் கட்ட வேண்டியிருக்கும் என்ற புதிய நடைமுறை அமல்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசா காலம் முடிந்த பிறகும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் நோக்கில், இந்த புதிய நடைமுறையை அமெரிக்க அரசு செயல்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது.
தூதரக அதிகாரிகள் விசா வழங்கும்போதே, விசா விண்ணப்பதாரர்களிடம் 13 லட்சம் ரூபாய் டெபாசிட் தொகையை செலுத்தும்படி கேட்கலாம். விசா காலம் முடிவடைவதற்குள் அமெரிக்காவிலிருந்து வெளியேறுபவர்களுக்கு இந்த டெபாசிட் தொகை திரும்பக் கிடைக்கும். ஆனால், விசா காலம் முடிந்த பிறகும் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு இந்தத் தொகை கிடைக்காது என்று கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இந்த புதிய டெபாசிட் நடைமுறை ஆகஸ்ட் 20 முதல் அமலுக்கு வரும் என்றும், இது ஒரு வருட காலத்திற்கு சோதனை முயற்சியாக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய விதிமுறைகள் எந்தெந்த நாடுகளுக்குப் பொருந்தும் என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.