ஆயுதக்குழுக்களுக்கு எதிரான நடவடிக்கையை எடுக்கத் தவறியதால், பாகிஸ்தானுக்கான 300 மில்லியன் டாலர்கள் உதவி தொகையை ரத்து செய்வதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவிடம் இருந்து பில்லியன் கணக்கான டாலர்களை பெற்றுக் கொண்டு, தங்களையே ஏமாற்றுவதாக பாகிஸ்தான் மீது அதிபர் டிரம்ப் ஏற்கனவே குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய தொகையை மற்ற அவசர விஷயங்களுக்கு முன்னுரிமை அளித்து அதற்கு செலவிடப் போவதாக பென்டகனின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஹக்கானி மற்றும் ஆஃப்கான் தலிபான் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளை கட்டுப்படுத்த தவறியதாக பாகிஸ்தானை அமெரிக்க அரசுத்துறை விமர்சித்துள்ளது.
அனைத்து தீவிரவாத அமைப்புகள் மீதும் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்" என்று அறிக்கை வெளியிட்டுள்ள பென்டகன், பாகிஸ்தானுக்கான 300 மில்லியன் டாலர்கள் உதவி தொகையை வேறு விஷயங்களுக்கு பயன்படுத்த போவதாக தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் புதிய பிரதமரான இம்ரான் கானை சந்திக்க, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ அங்கு செல்லவிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டுக்கான பாதுகாப்பு உதவி அனைத்தையும் நிறுத்தப் போவதாக கடந்த ஜனவரி மாதமே அமெரிக்க அறிவித்திருந்தது.
ஆயுதக் குழுக்களுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் வழங்குவதாக அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் புகார் கூறி வருகின்றன. எல்லை தாண்டி ஆஃப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்த ஆயுதக் குழுக்களை பாகிஸ்தான் அனுமதிப்பதாக குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், இதனை அந்நாடு மறுத்து வருகிறது.
பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதாக கூறப்படும் தீவிரவாதக் குழுக்கள் எது?
அண்டை நாடான ஆஃப்கானிஸ்தானில் பெரும்பாலான நடவடிக்கைகளை மையமாகக் கொண்டு இயங்கும் ஹக்கானி குழுவை, எல்லை தாண்டி செயல்பட பாகிஸ்தான் அனுமதிப்பதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
ஆஃப்கான் தலிபானுடன் தொடர்புடைய இக்குழு, ஆஃப்கான் அரசிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. மேலும்,ஆஃப்கான் தலிபானுடன் தொடர்பில் உள்ள பாகிஸ்தானிய தலிபான் குழுக்கள் பாகிஸ்தானில் தாக்குதல் நடத்துவதை இலக்காக கொண்டுள்ளன.
ஹக்கானி மற்றும் ஆஃப்கான் தலிபான் ஆகிய இரு குழுக்களும், ஆஃப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் அமெரிக்க படையினர் பலரும் கொல்லப்பட்டுள்ளனர்.