பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து..! 23 தொழிலாளர்கள் உடல் கருகி பலி..!!

Senthil Velan

வியாழன், 18 ஜனவரி 2024 (10:43 IST)
தாய்லாந்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 23 தொழிலாளர்கள் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.
 
தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் பட்டாசு ஆலைகள் அதிகம் உள்ளன. வரும் பிப்ரவரியில் சீனா புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளதால்  தாய்லாந்தில் பட்டாசுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில் தாய்லாந்தின் சுபன் பூரி மாகாணத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில்  வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பட்டாசு ஆலை இடிந்து முற்றிலுமாக தரைமட்டமானது. அந்த இடமே கரும்புகையால் சூழப்பட்டது.
 
வெடி விபத்து நடந்த சமயத்தில் 30 ஊழியர்கள் வரை பணியில் இருந்ததாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர், வெடிவிபத்து நடந்த பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தீயை அணைத்தனர்.
 
இந்த கோர விபத்தில் 23 பேரின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. வெடிவிபத்தில் பலரது உடல்கள் துண்டு துண்டுகளாக சிதறியதால், மற்றவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் எழுந்துள்ளது. எனவே பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
 
கடந்த ஜூலையில் தாய்லாந்தின் நராதிவாட் மாகாணத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 10 பேர் பலியானர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்