கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் ஆளுநர் கையெழுத்திட வேண்டும்- தினகரன் வலியுறுத்தல்

புதன், 1 நவம்பர் 2023 (20:52 IST)
சுதந்திரப் போராட்ட வீரரும் மூத்த இடதுசாரி தலைவருமான தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு, கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டு அவர் ஆற்றிய தியாகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என தமிழக ஆளுநர் அவர்களை வலியுறுத்துகிறேன் என்று டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் வலைதல பக்கத்தில்.
 
''மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவின் போது தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி என்.சங்கரய்யா அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
 
சங்கரய்யா அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்காக மதுரை காமராசர் பல்கலைக்கழக சட்டவிதிகளின்படி ஆட்சிக்குழு மற்றும் ஆட்சிப் பேரவைக் குழுவில் முறைப்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் ஆளுநர் அவர்கள் கையெழுத்திட மறுப்பது சுதந்திர போராட்ட தியாகிகளை அவமதிக்கும் செயலாகும்.
 
இந்திய சுதந்திரத்திற்காக, விவசாயிகளுக்காக, அடித்தட்டு ஏழை மக்களுக்காக, தீண்டாமை கொடுமைக்கு எதிராக என தன் வாழ்நாள் முழுவதையுமே போராட்டம் நடத்தியும் சிறைக்கு சென்றும் கழித்த தோழர் சங்கரய்யா அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அவருக்கு கௌரவ பட்டம் வழங்கும் கோப்பில் உடனடியாக கையெழுத்திடுமாறு ஆளுநர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்