பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர் மூளையில் மைக்ரோ சிப்! – எலான் மஸ்க்கின் ”நியூராலிங்க்” சாதனை!

Prasanth Karthick

செவ்வாய், 30 ஜனவரி 2024 (11:36 IST)
பிரபல உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க்கின் நியூராலிங்க் ஆராய்ச்சி நிறுவனம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர் மூளையில் மைக்ரோ சிப்பை வெற்றிகரமாக பொருத்தியுள்ளது.


 
ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனம், டெஸ்லா எலெக்ட்ரிக் கார் நிறுவனம் என எதிர்காலத்தை கணக்கிட்டு பல தொழில்நுட்ப வளர்ச்சிகளை உலக அளவில் மேற்கொண்டு வருபவர் உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க். இவரது நியூராலிங்க் ஆய்வு நிறுவனம் மருத்துவத்துறையில் மிக முக்கியமான ஆய்வு ஒன்றை செய்து வந்தது.

அதன்படி உடலின் முக்கிய உறுப்புகளான கை, கால் உள்ளிட்ட அசையும் உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டவர்கள் தங்கள் மூளையை கொண்டே மற்றவற்றை இயக்குவது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதற்காக மூளையில் மைக்ரோ சிப் ஒன்று பொருத்தப்படும் அதை வைத்து அவர்கள் மின்னணு சாதனங்களை இயக்க முடியும்.

ALSO READ: X-தளத்தில் ஆடியோ & வீடியோ கால் வசதி.. ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் அறிமுகம்..!
 
இந்த மைக்ரோசிப் முதலில் குரங்குகளின் மூளையில் செலுத்தப்பட்டு சோதனை முயற்சிகள் செய்யப்பட்டது. அவ்வாறு சிப் பொருத்தப்பட்ட குரங்குகள் திரையை தொடாமல் கேம் விளையாடிய வீடியோவும் வைரலானது. இதை மனிதர்களிடையே சோதனை செய்ய தன்னார்வலர்களை பயன்படுத்த அனுமதி பெறப்பட்டது.

அந்த வகையில் தன்னார்வலராக வந்த பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நபருக்கு நியூராலிங்க் மைக்ரோ சிப் வெற்றிகரமாக மூளையில் பொருத்தப்பட்டுள்ளது. அவர் எந்த பக்க விளைவுமின்றி நலமுடன் இருப்பதாக எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த சிப் அவரது மூளையில் வெற்றிகரமாக செயல்படுகிறதா என்பது அடுத்தடுத்து நடத்தப்படும் சோதனைகள் மூலம் தெரிய வரும். இந்த சிப் முயற்சி வெற்றியடைந்தால் மின்னணு சாதனங்களை கைகள் இல்லாத, உடல் உறுப்பு இயக்கமற்ற மக்களும் மூளையை கொண்டே இயக்க முடியும் என்பதால் இந்த ஆய்வு குறித்து மருத்துவத்துறையில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்