அமெரிக்க மாகாணமான கலிஃபோர்னியாவின் வடக்குப் பகுதியில் விரைவாக பரவி வரும் காட்டுத்தீ இரண்டு தீயணைப்பு வீரர்களைப் பலியாக்கியுள்ளதோடு, அவ்விடத்தை விட்டு பல்லாயிரக்கணக்கான மக்களையும் வெளியேற செய்துள்ளது. இதில் ஒன்பது பேர் காணாமல் போயுள்ளனர்.
ரெட்டிங் நகரத்தில் இருந்து மட்டும் 40 ஆயிரம் மக்கள் வெளியேறியுள்ளனர். அதிகாரிகள் வீடு வீடாக சென்று அங்குள்ள மக்களை வெறியேற வலியுறுத்தி வருகிறார்கள். ஷாஸ்டா எனும் பகுதியில் காற்று வேகமாக வீசுவதால், நெருப்பு சுழற்காற்று உருவாகி மரங்களை வேரோடு சாய்ப்பதாகவும், கார்கள் அடித்து செல்லப்படுவதாகவும் தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.