ஏமன் நாட்டில் மக்களாட்சி நடந்து வந்த நிலையில் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த 2014ம் ஆண்டு மக்களாட்சியை கலைத்து விட்டு தங்களது ஆட்சியை நடத்தி வருகின்றனர். ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஒழிக்க சவுதி அரசு முயற்சித்து வரும் நிலையில் ஏமனில் பல பகுதிகளில் உள்நாட்டு போர் நடந்து மக்கள் லட்சக்கணக்கில் இறந்துள்ளனர்.
தொடர்ந்து போர், கலவரங்கள் நிகழ்ந்து வருவதால் இயல்பு வாழ்க்கையை இழந்த மக்கள் பலர் உணவுக்கே வழியில்லாமல் வறுமையில் வாடும் நிலைமை உள்ளது. இந்நிலையில் ரமலான் மாதத்தை சிறப்பிக்கும் விதமாக சில தன்னார்வல அமைப்புகள் சேர்ந்து ஏழை மக்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கும் நிதியுதவி நிகழ்ச்சியை நடத்தியுள்ளன.
தலைநகர் சனாவில் தன்னார்வல வர்த்தக அமைப்புகள் நடத்திய இந்த நிகழ்ச்சியில் உணவையும், உடையையும் பெறுவதற்காக ஏராளமான மக்கள் குவிந்தனர். அவர்களை கட்டுப்படுத்துவதற்காக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கியால் சுட்டதில் பயந்து நாலா புறமும் அவர்கள் சிதறி ஓடியுள்ளனர். இந்த விபத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 78 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.