இந்த விபத்து இன்று (நவம்பர் 23) காலை 7.30 அளவில் இடம்பெற்றதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. குறிஞ்சாக்கேணி பகுதியிலிருந்து கிண்ணியா நோக்கி பயணித்த படகொன்று இவ்வாறு கவிழ்ந்துள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர். குறித்த படகில் 25 முதல் 30 பேர் வரை பயணித்துள்ளமை, போலீஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், 17 பேர் மீட்கப்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பகுதியில் மீட்புப் பணிகளுக்காக 8 கடற்படை குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. அத்துடன், மீட்புப் பணிகளில் போலீஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்துள்ளனர். குறிஞ்சாக்கேணியையும், கிண்ணியாவையும் இணைக்கும் பகுதியானது, முகத்துவார பகுதியாக காணப்படுகின்றது.
குறிஞ்சாக்கேணி பகுதிக்கும், கிண்ணியா பகுதிக்கும் இடையில் சுமார் 100 மீட்டர் தொலைவு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பகுதிகளுக்கு இடையில் பாதை வசதிகள் இல்லாமை காரணமாக, மக்கள் படகு மூலமே தமது நாளாந்தம் நடவடிக்கைகளை நிறைவேற்றி வந்துள்ளனர். இவ்வாறான நிலையிலேயே, இந்த படகு கவிழ்ந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.