ஊட்டிக்கு வரும் பயணிகள் ஏமாற்றம்
வெள்ளி, 8 அக்டோபர் 2010 (13:07 IST)
தற்போது சீசன் காலம் என்று எண்ணி ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், அங்கு பெய்து வரும் தொடர் மழையால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பொதுவாக அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஊட்டியில் சீசன் துவங்கும். இந்த மாதங்களில் காலையில் வெயிலும், மாலையிலும் சாரல் மழையும், இரவில் குளிருமாக ஊட்டியே சில்லென்று இருக்கும்.
ஆனால் இந்த ஆண்டு அதற்கு மாறாக காலையிலேயே மழை துவங்கிவிடுகிறது. இரவு மழையுடன் கடுங்குளிரும் நிலவுகிறது. இதனால் குளிரைத் தாங்க முடியாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
மேலும், கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையால் கோத்தகிரி, குன்னூர் பகுதியிலும், மேட்டுப்பாளையம் அருகேயும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் மலை ரயில் போக்குவரத்து நேற்று ரத்து செய்யப்பட்டது.
நேற்றும் மதியம் வரை மழை நீடித்தது. இதனால் ஊட்டியின் பேருந்து நிலையம் உள்பட பல இடங்களில் தண்ணீர் தேங்கியிருந்தது. இதனிடையே ஊட்டி-குன்னூர் சாலையில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் அவ்வழியாக வரும் கனரக வாகனங்கள் அந்த சாலையில் செல்ல அனுமதிக்கப்படவில்லை.ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டன.