கார், இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் ஆட்டோ தொழில் துறை வரும் பட்ஜெட்டில் உற்பத்தி வரியை குறைக்க வேண்டும். அத்துடன் நிதி அமைச்சர் சிதம்பரம் தலையிட்டு குறைந்த வட்டியில் கடன் கிடைக்கவும், கடன் கொடுக்கும் நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவர்கள் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களின் விற்பனை மந்த கதியில் உள்ளது. இதன் விற்பனையை அதிகரிக்க நுகர்வோர் கடன்களை அதிக அளவு வாங்கும் வகையில் வட்டியை குறைக்க வேண்டும். கடன் வழங்கும் நடைமுறையையும் எளிமைப்படுத்த வேண்டும்.
இந்த துறைக்கு கடன் கிடைப்பது மிக கடினமாக இருக்கின்றது. பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி ஆகிய இரு வங்கிகள் மட்டும் வட்டியை குறைத்திருப்பது போதுமானதல்ல என்று வாகன உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர்.
இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தின் டைரக்டர் ஜெனரல் திலிப் ஷெனாய் கூறுகையில், வாகனங்களுக்கான உற்பத்தி வரியை குறைக்க வேண்டும். பல மாதிரியான உற்பத்தி வரி இல்லாமல், ஒரே மாதிரியாக உற்பத்தி வரி விதிக்க வேண்டியுது அவசியம். மத்திய விற்பனை வரியை குறைக்க வேண்டும்.
webdunia photo
WD
ஆட்டோ தொழில்களுக்கு உள்ள வரி விதிப்பு பிரச்சனை பற்றி அரசு சரியாக கவனம் செலுத்தவில்லை. உற்பத்தி வரி முறை தெளிவாக இல்லை. அரசு இப்போது கவனம் செலுத்துமா அல்லது சரக்கு மற்றும் சேவை வரி முறைக்கு மாறும் போது கவனம் செலுத்துமா என்பது தெரியவில்லை.
அடுத்த வருடம் தேர்தல் வருகின்றது. எனவே இப்போதைய பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் பொருளாதார நடவடிக்கைகள், அடுத்த பதினெட்டு மாதத்திற்கு அமலில் இருக்கும். எனவே இந்த பட்ஜெட்டில் இரு சக்கர வாகனத்துறைக்கு சில சலுகைகள் வழங்க வேண்டும்.
பேருந்து போன்ற பொது மக்களின் போக்குவரத்துக்கு பயன்படும் வாகனங்களின் உற்பத்தி வரியை எட்டு விழுக்காடாக குறைக்க வேண்டும். இதனால் நாட்டின் பொது மக்களுக்கான பேருந்து போக்குவரத்து அதிகரிக்கும். அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நவீன பேருந்துக்கு இறக்குமதி வரியை குறைக்க வேண்டும்.
பேருந்து போக்குவரத்து, நகர்ப்புற போக்குவரத்தை வசதிகளை அதிகரிப்பதை மாநிலங்களின் ஜவஹர்லால் நேரு நகர்ப்புற சீரமைப்பு திட்டத்துடன் இணைக்க வேண்டும். இதன் மூலம் போக்குவரத்திற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடியும் என்று ஷெனாய் கூறினார்.
(கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நிதி அமைச்சர் சிறிய கார்களுக்கான உற்பத்தி வரியை 16 விழுக்காடாக குறைத்தார். பெரிய ரக கார்களுக்கான உற்பத்தி வரி குறைக்கப்படவில்லை. அது முன்பு இருந்த 24 விழுக்காடாகவே இருக்கின்றது).
இது குறித்து போர்ட் இந்தியா நிறுவனத்தின் விற்பனை பிரிவு துணைத் தலைவர் ஸ்காட் மெக்கோர்மெக் கருத்து தெரிவிக்கையில், உற்பத்தி வரி ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். பல்வேறு விதமாக இருப்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. கார் வாங்குபவர்கள் தங்களுக்கு எது தேவை என்பதை முடிவு செய்து கொள்ளட்டும் என்று கூறினார்.
இந்தியாவில் வருடத்திற்கு எல்லா வகை வாகனங்களையும் சேர்த்து, 79 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இது உலக அளவில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்களில் 2.4 விழுக்காடாகும்.
இந்தியாவில் இருந்து 2003-04 நிதி ஆண்டில் நூறு கோடி டாலர் மதிப்பிற்கு வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இது 2005-06 ம் நிதி ஆண்டில் 180 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இந்த துறையில் நேரடியாக ஐந்து லட்சம் பேர் வேலை பார்க்கின்றனர். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.7 விழுக்காடாகும். இந்தியாவின் மொத்த மறைமுக வரிவருவாயில் இந்த துறை வாயிலாக 19 விழுக்காடு வருவாய் அரசுக்கு கிடைக்கிறது.
இது மட்டுமின்றி விற்பனை வரி, சாலை வரி, சரக்கு போக்குவரத்து கட்டணம் மீதான சேவை வரி போன்று பல்வேறு வகையில் மத்திய, மாநில அரசுகளுக்கு வருவாய் கிடைக்கின்றது.