காவிரி பிரச்சனை என்பது இன்று நேற்று தோன்றியது அல்ல, சுமார் ஐம்பது ஆண்டுகாலமாக தமிழகம், கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள பிரச்சனன. பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் உச்சநீதிமன்றம் சென்று சுமார் இருபது வருடங்களுக்கும் மேல் வழக்கு நடந்து தற்போதுதான் இறுதித்தீர்ப்பு வெளிவந்துள்ளது. ஆனால் அந்த தீர்ப்பை அமல்படுத்துவதில் கூட அரசியல் கட்சிகள் அரசியல் செய்வதால் இன்னும் இந்த பிரச்சனை நீண்டு கொண்டே செல்கிறது.
இந்த நிலையில் தமிழகம், கர்நாடகம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் இருந்திருந்தால் காவிரி பிரச்னை எப்போதோ தீர்ந்திருக்கும் என்றும், தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாகவே காவிரி பிரச்னையை தீர்த்துவிடுவோம் என்றும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் சற்றுமுன் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியும், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியான திமுக ஆட்சியும் இருந்தபோதும் இந்த பிரச்சனை தீரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை தமிழிசை கூறுவது போல் இரண்டு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி செய்திருந்தாலும் இந்த பிரச்சனை தீர்ந்திருக்க வாய்ப்பு இல்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.