தோல்விக்கு விஜயகாந்த் காரணமா? : திருமாவளவன் பதில்

சனி, 21 மே 2016 (12:07 IST)
தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி தோல்வி அடைந்தது பெற்றி விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், தேமுதிக மற்றும் மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பார்களும் டெபாசிட் இழந்தனர். தொல்.திருமாவளவன், விஜயகாந்த் ஆகியோர் தோல்வியடைந்தனர். 
 
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த தொல்.திருமாவளவன் “திமுக-அதிமுகவிற்கு மாற்றாக உருவாகிய எங்களுக்கு அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்களே வாக்களிக்கவில்லை. 
 
திமுகவும், அதிமுகவும் போட்டி போட்டுக் கொண்டு, பல ஆயிரம் கோடிகளை இறக்கி மக்களையும் ஊழல் கறைபடிந்தவர்களாக மாற்றி விட்டார்கள். இது திமுகவிற்கும், அதிமுகவிற்கும் ஏற்பட்ட வீழ்ச்சி.
 
விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததால்தான் நாங்கள் தோல்வி அடைந்தோம் என்பதை ஏற்க முடியாது. 
 
கூட்டணி ஆட்சி, ஊழல், மது ஒழிப்பு, சாதி மதவெறி அரசியல் எதிர்ப்பு, விளிம்பு நிலை சமூகத்தினருக்கான அரசியல் அதிகாரப்பகிர்வு ஆகிய மாற்று அரசியலை முன் வைத்ததால் அதிர்ச்சி அடைந்த பிற்போக்குவாத சக்திகள் எங்கள் மீதான நம்பகத்தன்மையை சீர் குலைக்கும் வகையில் எங்களுக்கு எதிரான அவதூறுகளை பரப்பினர்.
 
எங்களை அதிமுகவின்  ‘பி ’ என்று அபாண்டமாக குற்றம் சாட்டினர். வைகோ, விஜயகாந்த் ஆகியோருக்கு எதிராக பல்வேறு கட்டுகதைகளை இறக்கி விட்டார்கள” என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்