யாதும் ஊரே யாவரும் கேளிர் டீசர் சர்ச்சை … இயக்குனர் விளக்கம்!

சனி, 13 மார்ச் 2021 (11:13 IST)
விஜய் சேதுபதி நடிப்பில் வெங்கட கிருஷ்ணா ரோஹ்நாத் இயக்கியுள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் பட டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இயக்குநர் வெங்கட கிருஷ்ணா ரோகநாத் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் யாதும் ஊரே யாவரும் கேளீர். இப்படத்தில் மேகா ஆகாஷ் ரகுஆதித்யா, நடிகர் விவேக் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி இலங்கையில் இருந்து வந்து வாய்ப்புகளை தேடும் இசைக்கலைஞராக நடித்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வரவேற்பைப் பெற்றது. ஆனால் படத்தின் இயக்குனரான வெங்கட கிருஷ்ணா சமூகவலைதளப் பக்கத்தில் அது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். அதில் ‘இந்த டீசருக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நான் உருவாக்கி வைத்திருந்த டீசர் இதுவல்ல. என் தலையீடு இல்லாமலேயே தயாரிப்பு நிறுவனம் இந்த டீசரை உருவாக்கி வெளியிட்டுள்ளது’ என்று புலம்பித் தள்ளியுள்ளார். இது சமூகவலைதளங்களில் கவனிப்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்போது இயக்குனருக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வெங்கட கிருஷ்ணன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் ஒரு விளக்கத்தை அளித்துள்ளார். அதில் ‘அன்பார்ந்த நண்பர்களுக்கு, முந்தைய பதிவில் யாதும் ஊரே யாவரும்கேளிர் டீசர் வெளியானதை தொடர்ந்து என் மனவருத்தத்தையும், தயரிப்பு தரப்பு கொடுக்கும் விளக்கத்தை அறிவிக்கிறேன் என்று பதிவிட்டிருந்தேன்.

அதைத்தொடர்ந்து நான் பதிவிட்ட மறுநாளில் இருந்து என் முகநூல் பக்கத்தை பார்க்க முடியவில்லை என்று சிலர் கூற ஆரப்பித்தார்கள். மறு நாள் இந்த எண்ணிக்கை கூடியது. அடுத்த நாள் என்னாலும் என் முக நூல் பக்கத்துக்குள் நுழைய முடியவில்லை. வெங்கட கிருஷ்ண ரோகாந்த் பெயரிலான கணக்கு முடக்கப்பட்டதாக காட்டியது.

அதன் பின் நீண்ட நேர போராட்டத்திற்கு என முகநூல் பக்கம் மீட்கப்பட்டது.ஆனால் அதில் எனது கடைசி பதிவான யாதும் ஊரே யாவரும் கேளிர் டீசர் பதிவு நீக்கப்பட்டிருந்தது. அதற்கு முந்தைய எனது பதிவான ஜனா சாரின் லாபம் ட்ரைலர் தான் எனது கடைசி அக்டிவிட்டியாக முகநூல் காட்டியது. என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்க பெரிய துப்பறியும் அறிவு ஒன்றும் தேவைப்படாது தான். இருந்தாலும் ஊகங்களின் பின்னால் நான் செல்ல தயாரகயில்லை. அமைதியாக இருந்தேன். நேற்று, இந்த படம் உருவாக்கத்தில் இருந்து இன்று வரை இந்த ப்ராஜக்டின் முக்கிய காரணியாக இருக்கும் குமார் சார் போனில் பேசினார்.
சில அறிவுரைகள்... சில தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய விஷயங்கள்... அடுத்த செயல் திட்டங்கள் என்று எங்கள் உரையாடல் அடுத்த கட்டத்தை நோக்கி நகரத்தொடங்கி இருக்கிறது. சுமார் ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு ஆலுவலகம் செல்லப்போகிறேன். நல்லது. இனி நான் பேசப் போகும் விஷயம் தான் ரொம்ப முக்கியமானதாக நான் கருதுகிறேன்.

நான் அடிப்படையில் இயக்குநர் சங்க உறுப்பினர் இல்லை. பேராண்மையின் போது ஜனா சார் தற்காலிக உறுப்பினராக என்னை சேர்த்துவிட்ட போதும் அதை தொடராமல் விட்டதால் நான் இன்று இயக்குநர் சங்கத்தின் உறுப்பினர் இல்லை. அதனாலயே தவிர்க்க முடியாமல் இந்த விஷயத்தை பொதுவெளிக்கு கொண்டு வரும்படியாகிவிட்டது. இது முற்றிலும் ஒரு தவறான முன்னுதாரனம் என்பதை திரைத்துறை முன்னால் ஒப்புக்கொள்கிறேன்.

என் படத்து டீசரை என் முகநூல் பக்கத்தில் வெளியிட முடியாமலே போய்விடுமோ என்கிற மன உளைச்சல் இருந்தது...இன்று நிலைமை மாறி இருக்கிறது. 20 லடசத்தை தாண்டிய பார்வையாளர்கள், பாராட்டுகள், கருத்துகள், எதிர்கருத்துகள் என்று முன்னேறி போய் கொண்டிருக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் டீசரை எனது முக நூல் பக்கத்தில் பதிவிடுகிறேன். தாமதமாக இந்த டீசர் பதிவிடப்படுகிறது என்றாலும் ஒரு இயக்குநரின் தன்மானத்தோடு பதிவிடப்படுகிறது.’ என விளக்கம் அளித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்