வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகமான விஷ்ணு விஷால் அதன் பின்னர் முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை மற்றும் ராட்சசன் ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்து தனக்கென தமிழ் சினிமாவில் ஒரு மார்க்கெட்டை உருவாக்கியுள்ளார். அவர் இப்போது ராம்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
தற்போது சில படங்களில் நடித்து வரும் விஷ்ணு விஷால் திரைப்பட தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். அவருடைய தம்பி ருத்ரா கதாநாயகனாக நடிக்கும் ஓஹோ எந்தன் பேபி படத்தைத் தயாரித்து அதில் ஒரு சிறப்புத் தோற்றத்திலும் நடித்துள்ளார். அந்த படத்தின் ப்ரமோஷனுக்காக அளித்த நேர்காணலின் போது காடன் படத்தில் தனக்கு நடந்த மோசமான அனுபவம் குறித்து பேசியுள்ளார்.
அதில் “காடன் படத்தை முதலில் எனக்கு சொன்னபோது கதையின் இறுதிவரை என் கதாபாத்திரம் வரும்படிதான் சொன்னார் பிரபு சாலமன். அப்படிதான் ஷூட்டும் செய்யப்பட்டது. ஆனால் ரிலீஸுக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு என் கதாபாத்திரம் இடைவேளையோடு துண்டிக்கப்பட்டது. இதை நான் அந்த படத்துக்காக ப்ரமோஷன் செய்துகொண்டிருந்த போதுதான் அறிந்தேன். அதையும் இயக்குனர் என்னிடம் சொல்லவில்லை. வேறொருவரின் மூலம்தான் தெரிந்து கொண்டேன். அதனால் நான் இப்போது வரை பிரபு சாலமனிடம் பேசவில்லை” என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.