கடந்த பல ஆண்டுகளாக விக்ரம் அனைத்துத் தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படியான ஒரு கமர்ஷியல் வெற்றிப் படம் கொடுத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில் கடந்த மார்ச் 27 ஆம் தேதி ரிலீஸான வீர தீர சூரன் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. ஆனால் படம் ரிலீஸின் போது பல சட்ட சிக்கல்களை சந்தித்து முதல் நாள் இரண்டு காட்சிகள் ரிலீஸாகாமல் அதன் பிறகுதான் மாலைக் காட்சியில் இருந்து ரிலீஸானது.
இப்போது வெற்றிகரமாக ஓடிவரும் இந்த படம் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வந்தும் இந்த படம் மிகக் குறைவான அளவிலேயே வசூலித்துள்ளதாக ரசிகர்களும் விமர்சனங்களும் கருத்து தெரிவித்தனர். அதற்குக் காரணம் விக்ரம்தான் என்றும் பலரும் சொல்லி வருகின்றனர். ஏனென்றால் அவரை நம்பி தியேட்டர் வந்த ரசிகர்களைப் பல ஆண்டுகளாக அவர் வைத்து செய்துள்ளார். அதன் காரணமாக ரசிகர்கள் அவர் படத்துக்கு செல்வதையே விரும்புவதில்லை என்று சொல்லப்படுகிறது. அதுதான் வீர தீர சூரன் படத்தின் வசூலில் பிரதிபலித்துள்ளது.
ஆனாலும் படக்குழுவினர் இந்த படம் வெற்றிப்படம் என்பது போல விளம்பரங்களை செய்துவந்தனர். இது குறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசும்போது “வீர தீர சூரன் கண்டிப்பாக வெற்றிப்படம் இல்லை. ஏன் அதை வெற்றிப்படம் போல முன்னெடுக்கிறார்கள் என தெரியவில்லை. உண்மை நிலவரம் தெரியவேண்டும் அல்லவா? உண்மையை மறைத்து விக்ரம்முக்கு சென்று மாலை எல்லாம் போட்டு மரியாதை செய்தால், அவர் படம் வெற்றி என்று நினைத்து சம்பளத்தை உயர்த்த மாட்டாரா?” எனக் கூறியுள்ளார்.