குறைந்த விலையில் சானிடரி நாப்கின் தயாரிக்கும் எந்திரத்தைக் கண்டுபிடித்தவர், தமிழகத்தைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம். இவருடைய கதையை வைத்துத்தான் ஹிந்தியில் ‘பேட் மேன்’ படம் எடுக்கப்பட்டுள்ளது. பால்கி இயக்கிய இந்தப் படத்தில் அக்ஷய் குமார், ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்துள்ளனர்.
‘உங்கள் கதையைத் தமிழில் படமாக்க யாரும் முயற்சிக்கவில்லையா?’ என்று அவரிடம் கேட்டபோது, “இயக்குநர் வெற்றிமாறன் கூட என் கதையைப் படமாக்க ஆசைப்பட்டார். தெலுங்கு மற்றும் கன்னடத்தைச் சேர்ந்த சில உதவி இயக்குநர்கள் கூட கேட்டனர். ஆனால், ஹாலிவுட்டில் தான் என் கதையைப் படமாக்க வேண்டுமென ஆசைப்பட்டேன்.
காரணம், இது உலகளாவிய பிரச்னை. ஹாலிவுட்டில் இந்தக் கதை படமாக்கப்பட்டால் மிகப்பெரிய ரீச் கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால், ஹாலிவுட்டில் ஒரு படத்தை எடுக்க 10 முதல் 15 வருடங்கள் வரை ஆகும் எனத் தெரிந்தது. அந்த நேரத்தில்தான் பாலிவுட்டில் இருந்து அழைப்பு வந்தது. என் கதையைக் கொஞ்சம் கூட மாற்றாமல் படமாக்குவதாகச் சொன்னார்கள்” என்று தெரிவித்துள்ளார்.