சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. நடிகர் ரஜினி சட்டமன்ற தேர்தலில் கட்சி தொடங்கி போட்டியிட இருப்பதால் அண்ணாத்த பட பணிகளை விரைவாக முடிக்க முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய்யின் தலைப்பு அறிவிக்கப்படாத 65வது படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக முன்னதாகவே செய்திகள் வெளியானது.
இந்நிலையில் தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு விருந்தளிக்கும் வகையில் தளபதி 65 படத்திற்கான அப்டேட்டை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். நடிகர் விஜய் நடிக்கும் இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் இயக்க உள்ளார். நெல்சன் படங்களுக்கு வ்ழக்கமாக இசையமைத்து வரும் அனிருத் இந்த படத்திற்கும் இசையமைக்கிறார். விரைவில் வெளியாகவுள்ள விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.