பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு, ரச்சகொண்டா காவல் ஆணையரிடம் அளித்த புகாரை தொடர்ந்து, மோகன் பாபுவின் இரண்டாவது மகன் மற்றும் நடிகர் மஞ்சு மனோஜ், அவரது மனைவி மோனிகா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மோகன் பாபு தனது புகார் மனுவில், தனது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை தனது இரண்டாவது மகன் மஞ்சு மனோஜ் சில சமூக விரோதிகளுடன் வந்து தொந்தரவு அளித்ததாக புகார் அளித்துள்ளார். தனது மகன், மருமகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய சமூக விரோதிகளிடமிருந்து தனக்கும் தன்னுடைய வீட்டுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட வழக்குகள் மனோஜ் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், தன்னை அடையாளம் தெரியாத சில நபர்கள் வீட்டில் வந்து தாக்கியதாக மனோஜ் பதிலுக்கு காவல்துறையில் புகார் அளித்துள்ளார். ஆனால், இந்த புகாரில் அவர் தனது தந்தை மோகன் பாபு பெயரை குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.