நடிகர் சங்கத் தேர்தலே செல்லாது – நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம் !

புதன், 16 அக்டோபர் 2019 (08:14 IST)
நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைத் தொடர்பாக நடந்து வரும் வழக்கு விசாரணையில் தேர்தலே செல்லாது என அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டுள்ளார்.
 

சுமார் 3000 உறுப்பினர்கள் கொண்ட நடிகர் சங்கம் தங்களுக்குள் நிர்வாகிகளை தேர்வு செய்ய ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடத்துவதுண்டு. அவ்வகையில் 2019-2022ஆம் ஆண்டுக்கான தேர்தல், கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டன.

ஆனால் தேர்தலில் ஏற்பட்ட குளறுபடிகளால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைத்தது நீதிமன்றம். இது சம்மந்தமான வழக்கின் விசாரணை நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ‘கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த தேர்தலில் 80 சதவீத உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இல்லாததால் சங்கத்தின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது.’ என வாதாடினார்.

அதன் பிறகு வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர் ’நிர்வாகிகளின் பதவியை 6 மாதங்கள் நீட்டிக்க நடிகர் சங்க விதிகளில் இடமில்லை. அப்படியானால் சங்கத்தின் குழு நடத்திய தேர்தலே செல்லாது’ என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை அக்டோபர் 18 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்