ஆசியக் கோப்பை தொடரில் நேற்று இந்திய அணி தங்கள் முதல் போட்டியில் UAE அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த யுஏஇ அணி, இந்திய பந்துவீச்சின் அபார தாக்குதலால் வெறும் 57 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணி 13 ஓவர்கள் மட்டுமே விளையாடியது.
இந்த எளிய இலக்கை எதிர்த்து விளையாடிய இந்திய அணி பவர்ப்ளே முடிவதற்குள்ளாகவே அதிரடியாக விளையாடி 4.3 ஓவர்களில் இலக்கை எட்டியது. இதன் மூலம் இந்திய டி 20 போட்டிகளில் இரண்டாவது பேட்டிங்கில் தங்களது மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 93 பந்துகள் மீதமிருக்க இந்திய அணி தங்கள் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது.
இந்த போட்டியில் UAE அணி பேட் செய்துகொண்டிருந்த போது ஷிவம் துபே பந்து வீசினார். அப்போது அவரின் கைக்குட்டை இடுப்பில் இருந்து கீழே விழுந்துவிட அதை அவரிடம் சொன்னார் பேட்ஸ்மேன். ஆனால் அப்போது அவர் க்ரிஸூக்கு வெளியே நிற்க அவரை ஸ்டம்பிங் செய்யும் விதமாக ஸ்டம்புகளை அடித்தார். இதற்காக அப்பீல் செய்யப்பட்ட நிலையில் மூன்றாவது நடுவர் அவுட் என அறிவித்தார். ஆனால் அந்த விக்கெட் வேண்டாம் என சூர்யகுமார் யாதவ் சொல்ல மீண்டும் அவருக்கு விளையாட வாய்ப்பளிக்கப்பட்டது.