ட்விட்டர் என்ற சமூக வலைதளத்தை எலான் மஸ்க் வாங்கி தற்போது "X" என்று பெயர் மாற்றியுள்ள நிலையில், அதிகமான பயனர்கள் அந்த தளத்தில் உள்ளனர். அதுமட்டுமின்றி, அந்த தளம் ஏராளமான வருமானத்தை பெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன், சமூக வலைதளங்கள் பற்றிய கேள்விக்கு பதிலளிக்கும் போது, "நான் கடைசி இரண்டு ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் பயன்பாட்டை குறைத்துள்ளேன். உங்களுக்கு என்னுடைய சிம்பிள் அட்வைஸ் என்னவென்றால், நீங்களும் சமூக ஊடகங்களை குறைவாக பயன்படுத்துங்கள், குறிப்பாக ட்விட்டரை தவிர்ப்பது நல்லது," என்று தெரிவித்தார்.
மேலும், "என் அனுபவத்தில் இதை சொல்கிறேன். இதை பார்த்து ஒருவேளை என் ட்விட்டர் கணக்கை எலான் மஸ்க் முடக்கினால், அதுவே எனக்கு வெற்றிதான்," என்று கூறினார்.
அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பலர், "ட்விட்டர் தான் எங்களுக்கு இப்போது பெருமளவு வருமானம் கொடுத்துக் கொண்டிருக்கிறது," என்று பதிலளித்துள்ளனர்.