டெங்கு ஒழிப்பு பிரச்சாரத்தில் கடந்த சில வருடங்களாகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது தமிழக அரசு. மழைக் காலங்களில், தியேட்டர்களில் இடைவேளையின்போது டெங்கு பற்றிய விழிப்புணர்வு விளம்பரப் படம் ஒளிபரப்பப்படும். தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை தான் இந்த விளம்பரத்தைத் தயாரிப்பார்கள்.
ஆனால், முதன்முறையாக நடிகை ஸ்ருதி ஹாசன் இந்த விளம்பரப் படத்தைத் தயாரித்துக் கொடுத்துள்ளார். “என்னுடைய நிறுவனத்தின் முதல் தயாரிப்பே பெருமைப்படக் கூடியதாக இருக்கிறது. சமூக விஷயங்களுக்காக என் குரல் நிச்சயம் ஒலிக்கும். இந்த விளம்பரம் நன்றாக வந்திருப்பதில் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார். வரும் மழைக் காலத்தில் இருந்து திரையரங்குகளில் இந்த விளம்பரத்தைப் பார்க்கலாம்.