கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான ராஜ்குமாரின் மூத்த மகனான சிவராஜ், கடந்த 30 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். சமீபத்தில் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பரிச்சயம் ஆனார். அதன் பின்னர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்திலும் அவர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதை அடுத்து சிகிச்சை எடுக்க அமெரிக்கா சென்றுள்ளார். அங்குள்ள மியாமி புற்றுநோய் மருத்துவமனையில் அவருக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. அவரது சிறுநீர்ப் பை வெற்றிகரமாக அகற்றப்பட்டு குடலில் இருந்து செயற்கையாக ஒரு சிறுநீர்ப்பை உருவாக்கும் பணி தொடங்கியுள்ளதாக அவரது மருத்துவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது ரசிகர்களின் அன்புக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள சிவராஜ்குமார் “நான் புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் வென்றுள்ளேன். ரசிகர்களின் அன்புக்கு நெஞ்சார்ந்த நன்றி. மார்ச் மாதத்தில் இருந்து நான் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.