தமிழ் சினிமாவில் அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி என பல பெயர்களை பெற்றவர் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி. கன்னடத்தில் 1955ல் வெளியான மகாகவி காளிதாஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் ஜெமினி, சாவித்ரி நடித்த திருமணம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என 200 படங்களுக்கும் மேல் நடித்துள்ள சரோஜா தேவிக்கு தமிழில்தான் ரசிகர்கள் அதிகம். சரோஜா தேவியின் கொஞ்சும் தமிழ் ரசிகர்களின் ஆதர்சமான ஒன்றாக இருந்தது.
அப்போதைய திரை சூப்பர் ஸ்டாரான எம்ஜிஆரோடு பல படங்களில் சரோஜா தேவி நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் ஆதரவை பெற்றார். இவர் நடித்த நடோடி மன்னன், எங்க வீட்டு பிள்ளை, பணத்தோட்டம், படகோட்டி, அன்பே வா, நான் ஆணையிட்டால், தாய் சொல்லை தட்டாதே, நீதிக்குப்பின் பாசம் என அனைத்து படங்களும் பெரும் வெற்றி பெற்றன.