இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக அமைந்த விஜய்யின் லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, லலித்குமார் தயாரித்திருந்தார். இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர்.
இந்த படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றாலும் விமர்சன ரீதியாக எதிர்மறை விமர்சனங்கள் அதிகமாக வந்தன. அதற்குக் காரணம் மிகவும் திராபையாக உருவாக்கப்பட்ட இரண்டாம் பாகம்தான். இந்நிலையில் அதை சமாளிக்க ரிலீஸூக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் படத்தில் சொல்லப்பட்ட பிளாஷ்பேக் பொய்யானது எனக் கூறிவருகிறார். ஆனால் அதையும் ரசிகர்கள் கலாய்க்க ஆரம்பித்தனர்.
இந்நிலையில் இப்போது நடிகர் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் லியோ படம் குறித்து பெயர் குறிப்பிடாமல் பேசியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் “சமீபத்தில் ஒரு படம் பார்த்துவிட்டு அந்த இயக்குனரிடம் பேசினேன். அவரிடம் படத்தின் முதல் பாதி நன்றாக இருந்தது எனக் கூறினேன். ஆனால் இரண்டாம் பாதி சரியாக இல்லை. அந்த மதத்தில் அப்படியெல்லாம் நம்பிக்கை இல்லை. அப்பா தன் பிள்ளையை பலி கொடுக்க மாட்டார் என்று கூறினேன். முதல் பாதி பற்றி பாராட்டி பேசும்போது கேட்டுக்கொண்ட இயக்குனர், இரண்டாம் பாதி பற்றி சொன்னதும், சார் நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். அப்புறமாக பேசுகிறேன் என சொல்லி போனை வைத்துவிட்டார்” என ஆதங்கத்தை வெளிபப்டுத்தியுள்ளார்.