கடந்த ஆண்டு மூத்த அரசியல் தலைவர் மற்றும் சத்யா மூவிஸ் நிறுவனத்தின் திரைப்பட தயாரிப்பாளர், தமிழகத்தின் வரலாற்றில் முக்கிய ஆளுமையாக இருந்த அருளாளர் திரு ஆர்.எம். வீரப்பன் மறைந்தார். அவரது இறப்பு தமிழ் சினிமா உலகிலும், அரசியல் உலகிலும் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியது என்று சொன்னால் அது மிகையாகாது.
இந்நிலையில் அவர் குறித்த ஆவணப்படம்,”ஆர் எம் வி தி கிங்மேக்கர் என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்த ஆவனப்படத்தில் ஆர் எம் வி யோடு இணைந்து பயனித்தவர்கள் அவர் பற்றிய நினைவுகளைப் பற்றி பேசியுள்ளனர். அதில் ரஜினி பேசியுள்ளது பற்றிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் “பாட்ஷா படத்தின் 100 ஆவது நாள் விழாவில் நான் அப்போது தமிழகத்தில் இருந்த வெடிகுண்டு கலாச்சாரம் பற்றி பேசினேன். அதனால் அந்த படத்தின் தயாரிப்பாளரும் அப்போது மந்திரியாகவும் இருந்த ஆர் எம் வி யை அந்த பதவியில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா. அது எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. என்னால் ஒருவரின் பதவி போய்விட்டதே என என நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். அதனால் ஆர் எம் வி அவர்களிடம் போன் செய்து பேசி வருத்தம் தெரிவித்தேன். ஆனால் அவர் பதவி எல்லாம் பெரிதில்லை என்று கூலாக பேசினார். நான் ஜெயலலிதாவை எதிர்த்து பேச மேலும் சில காரணங்கள் இருந்தாலும்,இதுதான் முக்கியக் காரணம். உண்மையிலேயே ஆர் எம் வி ஒரு கிங் மேக்கர்தான்” எனக் கூறியுள்ளார்.