ராஜராஜ சோழன் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமா?

வியாழன், 13 ஜூன் 2019 (19:27 IST)
தஞ்சை பெரிய கோவிலை கட்டியதற்காக கூட ராஜராஜ சோழனின் பெயர் இவ்வளவு பரபரப்பாக செய்தி வந்திருக்காது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் இயக்குனர் ரஞ்சித் பற்ற வைத்த ராஜராஜ சோழன் குறித்த சர்ச்சைக்குரிய நெருப்பு தற்போது இணையதளங்களில் பற்றி எரிகிறது. எந்த பிரச்சனையையும் அரசியலாக்கும் நம்மவர்கள் இதையும் அரசியலாக்கி வருகின்றனர்.
 
இந்த நிலையில் திடீரென ராஜராஜ சோழனின் பெயர் பரபரப்பாக பேசப்படுவதால் சிவாஜி கணேசன் நடித்த 'ராஜராஜ சோழன்' திரைப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய இந்த படத்தின் உரிமையை வைத்திருக்கும் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
கடந்த 1973ஆம் ஆண்டு வெளிவந்த 'ராஜராஜ சோழன்' படத்திற்கு ஒருசில பெருமைகள் உண்டு. இந்த படம் தான் தமிழில் முதல்முதலில் வந்த சினிமாஸ்கோப் படம் ஆகும். அதேபோல் இந்த படத்தில் சிவாஜி கணேசன் ஒரு பாடலை பாடியுள்ளார். அவர் இதற்கு முன்னும், இந்த படத்திற்கு பின்னும் பாடல்களை பாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 'தென்றலோடு உடன்பிறந்தாள் செந்தமிழ்ப்பெண்' என்ற பாடலை சிவாஜி கணேசன், டி.ஆர்.மகாலிங்கத்துடன் இணைந்து பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்திற்காக படப்பிடிப்பு நடத்த தஞ்சை பெரிய கோவிலில் அனுமதி மறுக்கப்பட்டதால் தஞ்சை பெரிய கோவிலை செட் போட்டு படமாக்கினர்
 
ராஜராஜ சோழன் குறித்து பரபரப்பாக செய்திகள் வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த படம் ரிலீஸ் ஆனால் ஓரளவு வசூலைப்பெறும் என்ற எதிர்பார்ப்பில் விரைவில் இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்