’கிடா’ படம் காட்சி ரத்து.. இயக்குனர் ரா வெங்கட் புலம்பல்..
செவ்வாய், 14 நவம்பர் 2023 (12:33 IST)
ரா வெங்கட் இயக்கிய கிடா படத்தின் காட்சி போதுமான பார்வையாளர்கள் வராததால் காட்சி ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து ரா வெங்கட் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:
இன்று காலை என் நண்பர்கள் இருவர் கிடா படம் பார்க்க காசி டாக்கீஸ் யிருக்கிறார்கள்.. கூடவே ஒரு எட்டு பேரும் கிடா எடுக்க வந்திருக்கிறார்கள் ஆனால் தியேட்டர் நிர்வாகம் பதினைந்து பேர் இருந்தால் தான் படம் போடுவோம் என்றிருக்கிறார்கள்.. நண்பர்கள் பரவாயில்லங்க பதினைஞ்சு டிக்கெட் தான நாங்களே இன்னும் அஞ்சு டிக்கெட் எடுக்கிறோம்னு சொல்லியும் படம் போடல.. ஷோ கேன்சல்...
எங்கோ ரிவியூ படிச்சிட்டு படம் பார்க்க வர்றவங்ககிட்ட என்ன பதில் சொல்றதுன்னு எனக்கும் தெரியல.. நல்ல படம்னு தேடி வந்தோம்னு சொல்றாங்க.. ஆனா ஷோ கேன்சல்.. இப்படிலாம் நடக்கும்னு தெரிஞ்சு தான சின்னபடங்கள் வருதுன்னு நீங்க சொல்லவர்றது தெரியுது... ஆனா ஆதங்கத்த எங்க கொட்டுறது .. அதான் இத ஷேர்
பண்ணுனேன்..
மதுரையில ஒரு ஷோ தான் குடுத்தாங்க அங்கயும் இப்ப ஷோ காட்டல.. மக்களே உங்களின் அருகே எதோ ஒரு ஷோ கிடா ஓடுச்சுன்னா போய் பாருங்க.. கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும்.. நன்றி
இதுகுறித்து புளு சட்டை மாறன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:
ஜப்பான், ஜிகர்தண்டா போன்ற படங்களின் ஹூரோ கார்த்தி, இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், நடிகர் லாரன்ஸ் போன்றோருக்கு பால்கனி முழுக்க புக் செய்து படம் பார்க்க வைக்கும் காசி தியேட்டர், குரோம்பேட்டை வெற்றி தியேட்டர் உள்ள இதே சென்னையில்தான்...
சிறிய பட்ஜெட்டில் எடுத்து, சர்வதேச அங்கீகாரம் பெற்ற இயக்குனரை படம் பார்க்க விடாத கொடுமையும் நடக்கிறது. ஜிகர்தண்டாவை பல் இளிக்க பாராட்டிய ஒரு சினிமா பிரபலமும் இதுபற்றி வாய் திறக்காமல். தீபாவளி பலகாரத்தை அப்பிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு கார்த்திக் சுப்பராஜ் போன்றோரின் ட்விட்டர் ஐடி மட்டுமே தெரியும். ரா.வெங்கட்டின் ஃபேஸ்புக் ஐடி தெரியாததில் ஆச்சர்யம் இல்லை.
தரமான சிறிய படங்களை அழிக்க வெளியில் இருந்து ஆட்கள் வரவேண்டாம். இவர்களே போதும். குறைந்தபட்சம் எத்தனை டிக்கட் வாங்கினால் ஷோ போடப்படும் என்பதை தியேட்டர் கவுண்ட்டர் மற்றும் ஆன்லைன் புக்கிங்கில் வைத்து தொலையவும். நேரமாவது மிச்சமாகும்.
15 பேருக்கு டிக்கட் எடுக்கிறேன் என்று சொன்னபிறகும் ஷோ கேன்சல் செய்வது கொழுப்பின் உச்சம். இந்த லட்சணத்தில் சிறிய படங்கள்தான் எங்களை வாழ வைக்கிறது என பீத்தலாக பேட்டி தந்து வருகிறார் பருப்பூர் சுப்ரபணியம்.