இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் நயன்தாரா திருமணம் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் இந்த திருமணத்தின் வீடியோ Nayanthara Beyond the fairy tale ஆவணப்படமாக நெட்பிளிக்ஸில் சமீபத்தில் ரிலீஸானது. அதில் தனுஷின் அனுமதியின்றி அவர் தயாரித்த நானும் ரௌடிதான் படத்தில் இடம்பெற்ற காட்சிகள் பயன்படுத்தப் பட்டு இருந்தன.
இந்நிலையில் அனுமதி இல்லாமல் நானும் ரௌடிதான் படக் காட்சிகளைப் பயன்படுத்தியதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் தனுஷ் நயன்தாரா மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் விளக்கம் அளித்துள்ளார் நயன்தாரா.
அதில் “நானும் தனுஷும் பரம எதிரிகள் இல்லை. நண்பர்களாதான் இருந்தோம். ஆனால் கடைசி 10 ஆண்டுகளில் என்னென்னமோ நடந்துவிட்டது. நாங்கள் நானும் ரௌடிதான் படத்தில் இருந்து நான்கு வரிகளைப் பயன்படுத்ததான் அனுமதி கேட்டோம். அதற்கு அவர்கள் அனுமதி தரவில்லை என்றால் கூட பரவாயில்லை. ஆனால் எங்களிடம் பேசக் கூட அவர் தயாராக இல்லை. நான் அவர் மேனேஜர் உள்ளிட்ட அவர்தரப்பு நபர்களுக்கு அழைத்துப் பேசியும் அவரிடம் இருந்து பதில் இல்லை. அதற்கு அவருக்கானக் காரணங்கள் இருந்திருக்கலாம். ஆனால் எனக்கும் அதுபோல என் தரப்பு காரணங்கள் உள்ளன” எனக் கூறியுள்ளார்.