கோபிசாந்தா என்னும் இயற்பெயரைக் கொண்ட மனோரமா 1937 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ராஜமன்னார்குடியில், தந்தையார் காசி கிளார்க்குடையார் என்பவருக்கும், தாயார் ராமாமிர்தம்மாள் என்பவருக்கும் மகளாகப் பிறந்தார். வறுமை மற்றும் குடும்பப் பிரச்சனைக் காரணமாக, இவரும் இவருடைய தாயாரும் இராமநாதபுரம் மாவட்டம் காரைக்குடிக்கு அருகிலுள்ள பள்ளத்தூர் என்ற இடத்திற்கு குடிபெயர்ந்தனர்.
தன்னுடைய படிப்பை பள்ளத்தூரிலுள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில் தொடங்கிய அவர், சிறுவயதிலிருந்தே பாடுவதில் ஆர்வம் பெற்று விளங்கினார். அதனால் நாடக உலகில் நுழைந்த அவருக்கு அங்கே நல்ல வரவேற்புக் கிடைத்தது. நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு கவிஞர் கண்னதாசனால் அழைத்து வரப்பட்ட இவர் 1500 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழகத்தின் 5 முதல்வர்களோடு நடித்தவர் எனும் பெருமைக்குரியவர் ஆச்சி மனோரமா.
மேலும் 5000 நாடகங்களிலும் நடித்துள்ளதன் மூலம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் உடல்நலக் குறைவு காரணமாக இறந்துவிட்ட நிலையில் இன்று அவரது 84 ஆவது பிறந்தநாள் ரசிகர்களால் நினவுகூறப்பட்டு வருகிறது. சமூகவலைதளத்தில் பலரும் அவரது புகைப்படங்களைப் பகிர்ந்தும் வாழ்த்துகளைக் கூறியும் வருகின்றனர்.