துல்கர் சல்மான், ரக்சன், ரிதுவர்மா உள்ளிட்ட பலரது நடிப்பில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவான படம் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்த திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அது மட்டுமில்லாமல் விமர்சன ரீதியாகவும் திரைப் பிரபலங்கள் பலரால் பாராட்டப்பட்டது.
இந்த படம் வெளியான ஒரு சில வாரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் உடனே ஓடிடி தளத்திலும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலர் பாராட்டி வந்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் பாராட்டியுள்ளார். இது சம்மந்தமாக தேசிங்க் பெரியசாமியிடம் ரஜினி பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து இயக்குனர் தேசிங்கு பெரியசாமி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: "சூப்பர்.. எக்ஸலண்ட்.. ஹா.. ஹா.. ஹா.. வாழ்த்துக்கள்.. பெரிய ஃபியூச்சர் இருக்கு உங்களுக்கு". காலையில் இருந்து இதுமட்டும் தான் கேட்டுகிட்டு இருக்கு காத்துல. பறந்துட்டு இருக்கேன். அனைவருக்கும் நன்றி" என்று பதிவு செய்துள்ளார். ஆனால் சமூகவலைதளத்திலோ பலரும் அந்த உரையாடலை லீக் செய்ததே அந்த இயக்குனர்தான் எனக் குற்றம் சாட்டியுள்ளனர். இருவர் தொலைபேசியில் பேசும்போது அதை யாராவது ஒருவர்தான் ஒலிப்பதிவு செய்திருக்க வேண்டும். கண்டிப்பாக அதை ரஜினி செய்திருக்க மாட்டார். அப்படியானால் அந்த இயக்குனர்தான் ஒலிப்பதிவு செய்து இதை வெளியிட்டிருக்கவேண்டும். ஆனால் யாரோ லீக் செய்தது போல நல்ல பிள்ளையாக நடிக்கிறார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.