இது இந்தியாவை உருவாக்கும் தருணம்; கமல் கருத்து!

வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (14:57 IST)
ஆதார் தொடர்பான வழக்கில் தனி மனித ரகசிய காப்புரிமை, அடிப்படை உரிமையே என உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டு வருவதை எதிர்த்து தொடர்ச்சியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வருகிறது. நீதிமன்றத்தால் ஒவ்வொரு முறையும் ஆதார் எண் கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசியல் சாசனத்தின்படி ஒருவரின் அந்தரங்கம் அடிப்படை உரிமையா? என்ற கேள்வி எழுந்தது.
 
இதையடுத்து நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையில் அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. அதாவது, தனி மனித ரகசிய காப்புரிமை அடிப்படை உரிமையே என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு ஆதார் வழக்கில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதுகுறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், உச்ச நீதிமன்றம் தனி மனித உரிமையை நிலை நிறுத்தியுள்ளது. மதிப்பிற்குரிய நீதிபதிகளுக்கு மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும். இது இந்தியாவை உருவாக்கும் தருணங்களுள் ஒன்றாகும் என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்