காயப்பட்டது நான்தான்…- தீர்ப்புக்குப் பின் பாக்யராஜ்

செவ்வாய், 30 அக்டோபர் 2018 (13:43 IST)
நீண்ட இழுபறிக்குப் பிறகு சர்கார் கதைதிருட்டு விவகாரம் சமாதானமாக இன்று கோர்ட்டில் முடிந்துள்ளது.

இன்று நடைபெற்ற சர்கார் கதை திருட்டு விவகாரம் தொடர்பான விசாரணையில் இயக்குனர் முருகதாஸ் கதை ராஜேந்திரனுடையதுதான் என ஒத்துக்கொண்டதோடு படத்தில் அவருக்கு அங்கீகாரமாக அவரது பெயர் கதையில் ராஜேந்திரனின் பெயர் இடம்பெறும் எனவும் அறிவித்துள்ளார். மேலும் அவர் கேட்ட சன்மானமான 30 லட்சம் ரூபாயும் அவருக்கு அளிக்கப்பட்டது. இதனால் வழக்கு முடிக்கப்பட்டது.

முதல் முறையாக இது போன்ற கதை திருட்டு சம்மந்தமாக தொடரப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது உதவி இயக்குனர்கள் மத்தியில் உற்சாகத்தைத் தந்துள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு ராஜேந்திரனுக்கு ஆதரவாக வந்ததற்கு திரை எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் பாக்யராஜும் ஒரு முக்கியக் காரணமாக இருந்தார்.

ராஜேந்திரன் கொடுத்த புகார் உண்மை என அறிந்ததும் அவருக்கு ஆதரவாக முருகதாஸிடம் சமாதானம் பேச முயன்றது, முருகதாஸ் சாமாதானத்திற்கு ஒத்துக்கொள்ளாததால் ராஜேந்திரனுக்கு ஆதரவாக கடிதம் கொடுத்தது, தொலைக்காட்சிகளில் தோன்றி வருண் பக்க நியாயத்தை எடுத்துரைத்தது எனப் பலவிதங்களில் வருணுக்கு ஆதரவாக செயல்பட்டார். இன்று நீதிமன்றத்திற்கும் வந்து விசாரணையை பார்வையிட்டார்.

தீர்ப்புக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் ‘இந்த விஷயத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டது நான்தான். என் மகன் சாந்தனு தீவிர விஜய் ரசிகன். அவன் கூட என்மேல் இது சம்மந்தமாகக் கோபித்துக் கொண்டான். அதனால் நான், விஜய்யிடம் பேசி சூழ்நிலையை எடுத்துக்கூறினேன். அவர் என்படமென்று நீங்கள் எந்த பாரபட்சமும் காட்டவேண்டாம். சங்கத்தலைவராக என்ன செய்யவேண்டுமோ அதை செய்யுங்கள் எனக் கூறினார். ஆனால் இந்த விஷயத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் விஜய் ரசிகர்கள் என் மகனைப் பற்றி தவறாகப் பேசிவருகின்றனர். அது போன்ற செயல்களைத் தொடரவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். இந்த விவகாரத்தால் நிறையப் பேரின் நட்பை இழந்துள்ளேன். ஆனால் பொது விஷயம் என்று வரும் போது இது போன்ற பிரச்சனைகளை சந்தித்துதான் ஆகவேண்டும். ஒரு சங்கத்தின் தலைவராக செய்யவேண்டியதை செய்தேன். வரும் காலங்களில் சங்கத்தைப் பலப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்