உங்களை ஏமாற்றியதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.. 2018 பட இயக்குனர் வருத்தம்!

சனி, 23 டிசம்பர் 2023 (07:43 IST)
இந்த ஆண்டு மலையாளத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற  திரைப்படம் டோவினோ தாமஸ் நடித்துள்ள 2018. கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஒட்டி இந்த படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஜூட் ஆண்டனி. இந்த படம் சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து மலையாள சினிமாவின் அதிகபட்ச வசூல் செய்த படமாக உருவாகியுள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு இந்தியாவின் சார்பில் ஆஸ்கருக்கு செல்லும் படமாக 2018 படம் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து படக்குழுவினருக்கு வாழ்த்துகள் குவிந்துள்ளன. இதையடுத்து இந்த படத்தை அமெரிக்காவில் ப்ரமோட் செய்யும் விதமாக இப்போது அமெரிக்காவில் 400 திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்தனர்.

இந்நிலையில் இப்போது ஆஸ்கர் விருதின் பட்டியலில் 15 படங்கள் அடங்கிய இறுதிப் பட்டியல் சமீபத்தில் வெளியானது. அதில் 2018 படம் இடம்பெறவில்லை. இதையடுத்து ஆஸ்கர் விருதுப் பட்டியலில் இருந்து 2018 திரைப்படம் வெளியேறியது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுபற்றி பேசியுள்ள படத்தின் இயக்குனர் ஆண்டனி “இது வருந்தத்தக்கது.  உங்களை ஏமாற்றியதற்காக நான் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இந்த போட்டியில் நம் நாட்டை பிரதிநிதித்துவப் படுத்த எனக்கு கிடைக்க வாய்ப்பை என் வாழ்நாள் முழுவதும் நினைத்து பெருமிதம் அடைவேன். இது ஒவ்வொரு இயக்குனரும் எதிர்பார்க்கும் அரிய ஒரு சாதனையாகும். என்னை இந்த பயணத்துக்கு தேர்ந்தெடுக்க இறைவனுக்கு நன்றி. அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்