இனிமேல் யாரும் விடமாட்டோம்: கருப்பர் கூட்டத்திற்கு எச்சரிக்கை விடுத்த ஜாகுவார் தங்கம்

புதன், 22 ஜூலை 2020 (20:54 IST)
கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்தசஷ்டி கவசம் குறித்த சர்ச்சைக்குரிய வீடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் கருப்பர் கூட்டம் யூடியூபின் வீடியோக்கள் நீக்கம், அடுத்தடுத்து நான்கு கைது நடவடிக்கைகள் என ஊடகங்களுக்கு சரியான தீனி போட்டது. மேலும் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஒரே ஒரு டுவிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இந்த நிலையில் பிரபல சண்டைப்பயிற்சி இயக்குனர் ஜாகுவார் தங்கம் இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்து மதத்தை தவறாக பேசுபவர்களை இனிமேல் விடமாட்டோம் என அவர் ஆவேசமாக பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
கருப்பர் கூட்டம் குழுவினர் புரிந்து பேசுகிறார்களா? புரியாமல் பேசுகிறார்களா? என்பது தெரியவில்லை. மின்சாரம் கண்ணுக்கு தெரியாது. தொட்டால் தான் தெரியும். அதை போல் தமிழில் சில வார்த்தைகள் உண்டு. அந்த வார்த்தைகளுக்கு உயிர் உள்ளது. கந்த சஷ்டி கவசத்தை எழுதிய தேவராய சுவாமிகள் தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் தற்கொலை செய்ய முடிவு செய்தார். அந்த நேரத்தில் முருகன் கனவில் தோன்றி அவரை குணப்படுத்தினார். அதன் பின்னர் அவர் பாடியதுதான் கந்த சஷ்டி கவசம். இதனை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.
 
ஒருவருடைய அம்மாவிடம் நீ எப்படி பிறந்தாய் என்று கேட்டால், அம்மா வயிற்றில் இருந்து பிறந்தார் என்றுதான் கூறுவார்கள். அம்மா என்ன நீ பிறந்தாய் என்று யாருமே கேட்பதில்லை. எல்லாருக்குமே அது தெரியும். ஆனால் நாகரீகம் கருதி அதனை யாரும் கேட்க மாட்டார்கள். இதுவரை யாரும் அவ்வாறு கேட்டதும் இல்லை
 
நீங்கள் ஒரு இந்துவா? எதற்காக நீங்கள் இதுகுறித்து பேசுகிறீர்கள்? முன்னர் செருப்பு மாலை போட்ட காலம் எல்லாம் மலையேறி விட்டது. இனிமேல் அதுமாதிரி யாரும் செய்ய முடியாது. பெரியார் சிலைக்கு சாயம் பூசியவர் தைரியமாக சரண்டர் ஆனார். ஆனால் நீங்கள் ஏன் ஓடி ஒளிகிறீர்கள். தைரியமாக சரண்டர் ஆக வேண்டியது தானே. நீங்கள் என்ன உண்மையான நபரா? எங்கள் சாமியை எப்படி விமர்சனம் செய்யலாம்? எங்கள் மதம் குறித்து அவதூறாக கூறி எங்கள் மனதை புண்படுத்த கூடாது. அப்படியே பேசினால் இனிமேல் யாரும் விடமாட்டோம். ஏனெனில் இந்துக்கள் முழித்து கொண்டார்கள் என்று ஜாக்குவார்தங்கம் அந்த வீடியோவில் கூறியுள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்