என்னது 300 கோடி ஊழலா? கடுப்பான சூர்யாவின் சொந்தகார தயாரிப்பாளர்!
சனி, 25 ஜூலை 2020 (17:58 IST)
ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவன உரிமையாளரான ஞானவேல் ராஜா தன் மேல் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சூர்யாவின் தம்பியும் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளருமான ஞானவேல் ராஜாவை ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் அப்படி ஆகாவிட்டால் அவர் மேல் போலிஸார் நடவடிக்கைகள் எடுக்கலாம் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது சம்மந்தமாக ஞானவேல் ராஜா 300 கோடி ரூபாய் அளவுக்கு பண மோசடி செய்துவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் பரவின்.
ஆனால் அது உண்மையில்லை என்று ஞானவேல் ராஜா ஒரு அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளார். அதில், “கொரோனா வைரஸ் தாக்கத்தால் பொதுமக்களும், திரைத்துறையினரும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் இன்றைய நிலையில் சில தொலைக்காட்சி சேனல்கள், பத்திரிகைகள், மற்றும் சமூக வலைதளங்கள் என்னைப் பற்றிய உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இந்தச் செய்திகளில் எள் முனையளவும் உண்மையில்லை என்பதைத் தெரிவிப்பதற்காகவே இந்த விளக்க அறிவிப்பை வெளியிடுகிறேன்.
தமிழ்த் திரையுலகிற்கு தேசிய விருது உட்பட பல விருதுகளையும், பல திறமையான நடிகர்களையும், படைப்பாளிகளையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும் தந்துள்ள எனது ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட ‘மகாமுனி’ திரைப்படம் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி ரிலீஸ் ஆனது.
நீதிமணி என்பவர் 2019 மே மாதம் என்னை அணுகி ‘மகாமுனி’ திரைப்படத்தின் தமிழ்நாடு ஏரியா விநியோக உரிமை தனக்கு வேண்டும் என்று கோரினார். அவ்வகையில் 2019ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி ரூ.6,25,00,000 (ஆறு கோடியே இருபத்தைந்து லட்சம் ரூபாய்) தொகைக்கு நீதிமணியின் ‘Tarun Pictures’ நிறுவனத்திற்கு ‘மகாமுனி’ திரைப்படத்தை விற்பனை செய்வதாக முறையான ஒப்பந்தம் போடப்பட்டது. நீதிமணி பகுதித் தொகையாக ரூ.2,30,00,000 (இரண்டு கோடியே முப்பது லட்சம்) மட்டுமே செலுத்தினார். மீதமுள்ள ரூ.3,95,00,000 (மூன்று கோடியே தொன்னூற்று ஐந்து லட்சம்) தொகையை பிறகு தருவதாகக் கூறினார். இன்றுவரை தராமல் என்னை ஏமாற்றிவிட்டார். மீதமுள்ள தொகையைத் தரவேண்டி நீதிமணி மீது சினிமா துறையின் சட்ட திட்டப்படி நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீதிமணியும் அவரின் கூட்டாளிகளும் ரூ.3,00,00,000 (மூன்று கோடி) மோசடி செய்துவிட்டதாக துளசி மணிகண்டன் என்பவர் ஒரு புகார் அளித்துள்ளார். என் மீதோ, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மீதோ எவ்விதப் புகாரும் அளிக்கப்படவில்லை. ஒரு பொருளை வர்த்தகம் செய்யும்போது அதை வாங்கும் நபர் என்ன செய்கிறார், அவரின் பின்னணி என்ன என்பதை நாம் ஆராய்ச்சி செய்வதில்லை. சட்டப்படியான வியாபாரத்தை மட்டுமே பேசமுடியும். அவ்வகையில் ‘மகாமுனி’ திரைப்படத்தை சட்டப்படியாக முறையாக விற்பனை செய்ததைத் தவிர எனக்கும் நீதிமணிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.
நீதிமணி மீது துளசி மணிகண்டன் அளித்துள்ள புகாரில் எவ்வித முகாந்திரமும் இல்லாமல் என்னையும், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தையும் இணைத்து என் புகைப்படத்தையும் பயன்படுத்தி நான் நிதி மோசடி செய்துவிட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி ‘300 கோடி ரூபாய் மோசடி’ என உண்மைக்குப் புறம்பான, மிகவும் தவறான செய்திகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. என்னிடம் எவ்வித விளக்கமும் கேட்காமல், தன்னிச்சையாகவும், தனிமனித சுதந்திரத்திற்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ள இந்தச் செய்திகளைப் பார்த்து நானும், என் குடும்பத்தினரும் மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகியுள்ளோம்.
இதுபோன்ற செய்திகள் திரைத்துறையில் நான் சம்பாதித்து வைத்திருக்கும் நற்பெயருக்கு ஊறு விளைவிப்பதோடு எமது எதிர்கால வியாபாரத்திலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் ஆபத்துகள் உள்ளன. எனவே, இதுபோன்ற செய்திகளை என் அனுமதி பெறாமலும், உண்மைக்குப் புறம்பாகவும் யாரும் வெளியிட வேண்டாம் எனத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும், இதுபோன்ற செய்திகள் வெளியிடுவது தொடர்ந்தால் அந்தச் செய்தியை வெளியிடுபவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்குத் தொடர்வதோடு மான நஷ்ட ஈடு வழக்கும் தொடரப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தன் தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார்.