தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன். அவர் இயக்கிய மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன. ஆனால் அதன் பின்னர் அவர் தயாரிப்புப் பணிகளில் கால்பதித்ததால் இயக்குனராக பின்னடைவை சந்தித்தார். அவர் இயக்கி தயாரித்த துருவ நட்சத்திரம் திரைப்படம் 7 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. தற்போதைக்கு இயக்குனராக தமிழ் சினிமாவில் அவருக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை.
வெற்றிமாறன் கதை, திரைக்கதையில் தான் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக சமீபத்தில் கௌதம் மேனன் அறிவித்தார். அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதாகவும், அதில் ரவி மோகன் (ஜெயம் ரவி) கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த படம் 10 ஆண்டுகளுக்கு முன்னர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தொடங்கிக் கைவிடப்பட்ட சூதாடி படத்தின் கதைதான் என்று சொல்லப்படுகிறது. அதில் சில மாற்றங்களை செய்து இப்போது படமாக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.