டி.டி.வி. தினகரனுக்கு வேண்டுகோள் வைத்த விஷால்

வெள்ளி, 29 டிசம்பர் 2017 (10:07 IST)
ஆதரவற்றோர் மற்றும் முதியோர்களுக்கான உதவித்தொகை சரியாகச் சென்று சேர்கிறதா என கண்காணிக்குமாறு டி.டி.வி.  தினகரனுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார் விஷால்.
விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புரட்சித்தலைவி அமரர் ஜெயலலிதா முதியோர் ஓய்வூதிய திட்டத்துக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்தார். 2011இல் அவர் ஆட்சியமைத்தபோது 500 ரூபாயாக இருந்த இந்த உதவித்தொகையை, ரூபாய்  ஆயிரமாக உயர்த்தினார். 2016இல் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தபோது, தமிழ்நாடு முழுக்க சுமார் 21  லட்சம் முதியோருக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படுவதை உறுதி செய்தார். ரூபாய் 4 ஆயிரத்து 600 கோடி இந்த  திட்டத்துக்காக மட்டும் ஒதுக்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதா மறைந்த பிறகு இந்த திட்டம் சரியாக செயல்படுத்தப்படாததால், தமிழ்நாடு முழுக்கவே முதியோர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விதவைகளுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகை கூட முறையாக  கிடைக்கவில்லை. பிள்ளைகள் ஆதரவு இல்லாமல் தனியாக வசிக்கும் லட்சக்கணக்கான ஆண், பெண் முதியோர்களுக்கு மாதா  மாதம் வழங்கப்பட்ட உதவித்தொகை, கடந்த சில மாதங்களாக கிடைக்கவில்லை. இதனால் வயதான காலத்தில் உதவித்தொகை கேட்டு தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகிறார்கள்.
 
குறிப்பாக, ஆர்.கே.நகர் தொகுதியில் நேற்று முதியோர்கள் தங்களுக்கு பல மாதங்களாக நிறுத்தப்பட்டிருக்கும் உதவித்தொகையை கேட்டு சாலை மறியலும், உண்ணாவிரத போராட்டமும் நடத்தியிருக்கிறார்கள். ஆர்.கே.நகர் தொகுதியில்  சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதியோர்கள் உதவித்தொகை பெறுவதாக புள்ளி விவரம் சொல்கிறது. அவர்களுக்கு 5  முதல் 8 மாதங்கள் வரை உதவித்தொகை நிலுவையில் இருக்கிறது. அஞ்சல்துறை மூலமாக வழங்கப்பட்டு வந்தவரை இந்த பிரச்னை இல்லை. புரட்சித்தலைவி அவர்கள்தான் இந்த திட்டத்தின் முறைகேடுகளை தடுக்க வங்கி மூலம் வழங்க  உத்தரவிட்டார். ஆனால் வங்கி மூலம் வழங்கத் தொடங்கியதில் இருந்தே பயனாளிகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். வாரத்துக்கு ஒருநாள் வினியோகம், ஒரு நாளைக்கு இத்தனை பேர் தான் வர வேண்டும், மாதா மாதம் புதுப்பிக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளால் பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குவதில் தேக்கம் ஏற்படுகிறது. நிதி பற்றாக்குறையும்  இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
பெண்களுக்கும், முதியோர்களுக்கும் உறுதுணையாக இருந்தவர் புரட்சித்தலைவி. இனியும் நிலுவையில் வைக்காமல் தமிழக அரசு செவிசாய்த்து தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவற்றோர், விதவைகள், முதியோர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த  உதவித்தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும். ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதியில் உறுப்பினராகப் பதவியேற்றிருக்கும் டி.டி.வி. தினகரன், அந்த தொகுதியில் இந்த உதவித்தொகை ஒவ்வொரு மாதமும் சரியாக  வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்