இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பல ஆயிரக்கணக்கில் டிக்கெட்டுகள் விற்கப்பட்ட நிலையில் சிலர் மட்டுமே உள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமான கூட்டத்தால் டிக்கெட்டுகள் இருந்தும் பலர் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. உள்ளே சென்றவர்கள் நிலையும் திருப்திகரமாக இல்லை என கூறப்படுகிறது. குடிதண்ணீர், கழிவறை ஏற்பாடுகள் சரியாக இல்லாததும், ஏராளமான கூட்ட நெரிசலாலும் பலரும் சிக்கி தவித்துள்ளனர்.
பலர் மயங்கி விழுந்ததாகவும், கூட்டத்தில் பெண்களிடம் சிலர் தவறாக நடந்து கொண்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படாத பார்வையாளர்களின் டிக்கெட்டுகளுக்கான பணம் திரும்ப வழங்கப்படும் என நிகழ்ச்சி நடத்திய நிர்வாகமும், ஏ.ஆர்.ரஹ்மானும் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் இட்ட ட்விட்டர் எக்ஸ் பதிவில் கேள்வி எழுப்பியுள்ள ரசிகர்கள் “இங்கு பணம் மட்டுமே முக்கியமல்ல.. இதனால் பலர் பட்ட இன்னல்களை நீங்கள் பணத்தால் ஈடு செய்யமுடியாது” என்று கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் சரியாக திட்டமிடப்படாத இந்நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்ட ரசிகர்களிடம் ஏ.ஆர்.ரஹ்மான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.