விஜய் சந்திப்பு ரகசியத்தைக் கசியவிட்ட எடப்பாடி – அரசியல் பின்னணிதான் காரணமா?

சனி, 2 ஜனவரி 2021 (14:11 IST)
நடிகர் விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீஸுக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்ததை அரசியல் லாபமாக மாற்ற முயல்கிறாராம் முதல்வர்.

நடிகர் விஜய் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் “மாஸ்டர்”. கடந்த ஏப்ரலிலேயே வெளியாக வேண்டிய இந்த படம் கொரோனா காரணமாக பல மாதங்களாக வெளியாகாமல் இருந்த நிலையில் பொங்கலுக்கு முன்னதாக இந்த படத்தை வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர். மேலும் கொரோனா காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னரே திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில் பெரிய அளவில் படங்கள் எதுவும் வெளியாகாததால் திரையரங்குகளும் மாஸ்டர் ரிலீஸ எதிர்நோக்கி காத்துள்ளன.

இந்நிலையில் நடிகர் விஜய், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி 13 அன்று மாஸ்டரை வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில் ஓவர்சீஸ் திரையரங்குகளில் திரையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் 100% திரையரங்குகளை ஒதுக்குதல் தொடர்பாக கோரிக்கை விடுத்திருக்கலாம் என பேசிக் கொள்ளப்படுகிறது. இந்த சந்திப்பு மிகவும் ரகசியமாக இருக்கும் என அறிவித்ததால்தான் விஜய் சென்று முதல்வரை சந்தித்தாராம்.

ஆனால் இப்போது முதல்வர் செல்லும் இடமெல்லாம் விஜய் தன்னை வந்து சந்தித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கும் ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார் என்று சொல்லி வருகிறார். இதன் மூலம் விஜய் தங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளார் என்பது போன சூழலை உருவாக்கி, விஜய் ரசிகர்களின் வாக்குகளைக் கவர அதிமுக அரசு திட்டம் போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இப்போது விஜய் தரப்பு அப்செட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்