டான்ஸ் மாஸ்டரான தினேஷ், ஹீரோவாக அறிமுகமாகும் படம் ‘ஒரு குப்பைக்கதை’. காளி ரங்கசாமி இயக்கியுள்ள இந்தப் படத்தில், மனிஷா யாதவ் ஹீரோயினாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தினேஷ், “இப்படி ஒரு விஷயம் என் வாழ்க்கையில் நடக்கும்னு நினைச்சே பார்க்கலை. இந்தப் படத்தில என்னை ஹீரோன்னு சொல்லாதீங்க. என்னை ஹீரோவா போட்டா, என் உயரத்துக்கு கதாநாயகியே கிடைக்காதுன்னு டைரக்டர்கிட்ட சொன்னேன்.
என் மனைவியுடன் கலந்து ஆலோசித்த பின்பே இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். கதை, ஒரு மாதிரியான கதைதான். டான்ஸ் அப்படி இப்படின்னு இருந்தா வேண்டாம்னு சொல்லிருப்பேன். என் வாழ்க்கையில் இது மறக்க முடியாத நாள்.
ஆர்யா, கார்த்தியெல்லாம் கூப்பிட்ட அடுத்த நொடி, ‘எப்போ மாஸ்டர் வரணும்’னு கேட்டு எனக்கு முன்னாடி வந்து உட்கார்ந்திருக்காங்க. ‘சினிமாவுல யாரும் இல்லை’னு நினைச்சேன். ஆனால், ‘நாங்க இருக்கோம்’னு இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஹீரோக்களும் இயக்குநர்களும் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள். எல்லோருக்கும் என் நன்றிகள்” எனக் கண்கலங்கினார்.