இயக்குநர் ஷங்கர் இயக்கிய 'இந்தியன் 2' மற்றும் 'கேம் சேஞ்சர்' ஆகிய இரண்டு படங்களும் தொடர் தோல்விகளை சந்தித்த நிலையில், அவரது அடுத்த படமான 'இந்தியன் 3' வெளிவருமா என்ற சந்தேகம் திரையுலக வட்டாரங்களில் எழுந்துள்ளது. இந்த சூழலில்தான், ஷங்கர் அடுத்ததாக புகழ்பெற்ற 'வேள்பாரி' நாவலை திரைப்படமாக எடுக்கவிருப்பதாகவும், இந்த படத்தின் பட்ஜெட் ரூ.1000 கோடி என்றும், இதில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் இணைந்து நடிக்கவிருப்பதாகவும் சில சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன.
ஆனால், திரையுலக விவரம் அறிந்த வட்டாரங்கள் இந்த வதந்திகள் குறித்து தெளிவுபடுத்தியுள்ளன. ஷங்கர் 'வேள்பாரி' படத்தை இயக்குவது வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம், ஆனால் அதில் கமல் மற்றும் ரஜினி இணைந்து நடிக்க வாய்ப்பே இல்லை என்று அவர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
ஷங்கர் மீது கமல்ஹாசன் ஏற்கனவே மிகுந்த வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. 'இந்தியன்' படத்தின் முதல் பாகத்தை இயக்கியதை போல, 'இந்தியன் 2' படத்தை ஷங்கர் எடுக்கவில்லை என்றும், அதன் முடிவுகள் கமலுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும் தெரிகிறது. இது இருவருக்கும் இடையே மனவருத்தத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.
அதேபோல், '2.0' படம் படப்பிடிப்பின்போது ரஜினிக்கும் ஷங்கருக்கும் இடையே மன வருத்தம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், இருவரும் இணைந்து இன்னொரு படத்தில் பணிபுரிய வாய்ப்பே இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமின்றி, தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளை கொடுத்த ஷங்கரை நம்பி ரூ.1000 கோடி முதலீடு செய்ய எந்த தயாரிப்பாளரும் முன்வர மாட்டார்கள் என்றும் திரையுலக வட்டாரங்கள் அடித்துக்கூறுகின்றன. இந்த வதந்திகளையும் மீறி 'வேள்பாரி' படம் உருவாகுமா, அதில் கமல் மற்றும் ரஜினி இணைந்து நடிப்பார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.