‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நந்திதா. பெங்களூரைச் சேர்ந்த இவர், தமிழ்ப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் நடித்த ஒன்றிரண்டு படங்களைத் தவிர, மற்ற படங்கள் எதுவும் பெரிதாகப் போகவில்லை. தினேஷ் ஜோடியாக இவர் நடித்த ‘உள்குத்து’ படம், அடுத்த வாரத்தில் ரிலீஸாக இருக்கிறது.
“துணிக்கடையில் வேலை செய்யும் சாதாரணப் பெண்ணாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். என்னுடைய அண்ணனாக பால சரவணன் நடித்திருக்கிறார். காமெடியனான அவர், இந்தப் படத்தில் வில்லனாகவும் நடித்திருக்கிறார்” என்கிறார் நந்திதா.
கெஸ்ட் ரோலில் நடிப்பது குறித்து கேட்டபோது, “விஜய்க்கு ஜோடி என்று சொல்லித்தான் ‘புலி’ படத்தில் என்னை ஒப்பந்தம் செய்தனர். ஸ்ருதி, ஹன்சிகாவுக்கு இணையாக என்னுடைய கேரக்டரும் இருக்கும் என்று சொன்னார் இயக்குநர் சிம்புதேவன். ஆனால், அப்படிச் செய்யாமல் என்னை ஏமாற்றிவிட்டார்” என்று குமுறுகிறார் நந்திதா.