விஷாலுக்கு சிக்கல் ; நடிகர் சங்க கட்டிடம் கட்ட இடைக்கால தடை

சனி, 6 மே 2017 (14:20 IST)
நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


 

 
நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளான விஷால் அணியினர், சென்னை தி.நகரில் உள்ள சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்படும் என அறிவித்து அதற்கான வேலையில் தீவிரமாக இறங்கினர். 
 
கடந்த மார்ச் 31ம் தேதி, நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணி பூமி பூஜையுடன் சமீபத்தில் தொடங்கப்பட்டது. இதில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.   மாநகராட்சி அனுமதியுடன் திட்டம் அமைக்கப்பட்டு ரூ.26 கோடி செலவில் இந்த கட்டிடம் கட்டப்படுவதாக கூறப்பட்டது.
 
அந்நிலையில் 33அடி பொதுச் சாலையை ஆக்கிரமித்து இந்த கட்டிடத்தை கட்ட முயற்சிப்பாதாக ஶ்ரீரங்கன் அண்ணாமலை என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவின் விசாரணை கடந்த 4ம் தேதி நீதிமன்றத்தில் தொடங்கியது. 
 
அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், நடிகர் சங்கம் ஏன் பொது வழியை ஆக்கிரமிக்க வேண்டும். இதற்கு எப்படி மாநகராட்சி அனுமதி அளித்தது. ஏன் உங்களிடம் பணமே இல்லையா? எதற்காக பொதுவழியை ஆக்கிரமித்துள்ளீர்கள் என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர். மேலும், இதுகுறித்து நடிகர் சங்கம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.
 
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக இன்று நடைபெற்ற விசாரணையில், நடிகர் சங்க கட்டிடம் கட்ட இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இது தொடர்பாக வழக்கறிஞர் ஆணையம் ஒன்றை அமைத்து தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டதோடு, அதுவரை கட்டிடப்பணி நடைபெறக்கூடாது என அவர்கள் தீர்ப்பளித்தனர். 
 
இந்த வழக்கு அடுத்த மாதம் 2ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் விஷால் அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்